கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியை ஒட்டி உள்ள ஒரு தோட்டத்தின் பின்புறம் வனத்துறையால் தோண்டப்பட்ட அகழிக்குள் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யானைக்கு 15 வயது இருக்கும்.. அதன் உடல் மீது சோலார் மின் வேலி கம்பிகள் இருந்ததும் தெரிய வந்தது..இதுகுறித்து தகவல் அறிந்ததும் தலைமை வன பாதுகாவலர் வெங்கடேஷ் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அரசு கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த காட்டு யானை உடல் மீது சோலார் மின் வேலி கம்பிகள் இருந்ததால் அந்த யானை மின்சாரம் தாக்கி இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்கூறு பரிசோதனை செய்ததில் தும்பிக்கை உள்ளிட்ட பகுதி கருகி இருப்பதால் மின்சாரம் தாக்கி இறந்தது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் காட்டு யானை இரவு நேரத்தில் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமலை ராஜ் என்பவரின் தோட்டத்தில் நுழைய முயன்றுள்ளது .இந்த சமயத்தில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் காட்டுயானை சிக்கியதில் மின்சாரம் தாக்கி அகழிக்குள் விழுந்து பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது .மேலும் பேட்டரி உள்ளிட்டவை பழுதடைந்ததால் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சோலார் மின்சாரம் பயன்படுத்தாமல் நேரடி மின்சாரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை யடுத்து சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் திருமலை ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
மின்சாரம் தாக்கி காட்டுயானை பரிதாப பலி – தோட்ட அதிபர் மீது வழக்குபதிவு..








