வனத்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றியது ஏன்? அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி..!

ஊட்டி: உடல்நிலை சரியில்லாததால் இலாகாவை மாற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கேட்டதால் தனக்கு சுற்றுலாத்துறையை ஒதுக்கியதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகையில் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சுற்றுலாத் துறை உள்ளது. குறிப்பாக நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் 8 நாட்கள் தங்கி சுற்றுலா தலங்களை பார்வையிடும் வகையிலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டம் தேயிலை வா்த்தகம் மற்றும் சுற்றுலாவையே பெருமளவில் நம்பி உள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் வருவாயை ஈட்டும் வகையில் சுற்றுலா தொழில் மேம்படுத்தப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் இலாகா மாற்றப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் உடல்நல பாதிப்பு காரணமாக தன்னிடம் உள்ள வனத்துறையை மாற்றி விட்டு சுற்றுலாத் துறையை வழங்கும்படி நான் முதல்-அமைச்சரின் கேட்டேன். அதன் காரணமாகவே சுற்றுலாத்துறை எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.