காங்கிரஸ் தலைவர் யார்? கிளைமேக்ஸ்க்கு வந்துவிட்டது… ஓ! இவர்தான் அடுத்த தலைவரா..?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெரும்பாலும் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியின் நேரடி ஆதரவின் கீழ் இவர் களமிறங்குவதால் கார்கேவிற்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கி வருகிறது. தலைவர் பதவிக்கான தேர்தல் சசி தரூர் vs மல்லிகார்ஜுனா கார்கே என்று மாறி உள்ளது.

எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். சசி தரூர் திருவனந்தபுரம் எம்பியாக இருக்கிறார்.

இவர் முன்பே தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் சோனியா – ராகுலுக்கு எதிராக இருக்கும் ஜி 23 தலைவர்களில் இவரும் ஒருவர். சோனியாவின் தலைமைக்கு எதிராக இவர் பேசி வந்தார். இந்த நிலையில்தான் இவர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இவர் முன்பே சோனியா காந்தியை சந்தித்து தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக கூறி உள்ளார். அதற்கு சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

முன்னதாக சசி தரூரை எதிர்த்து ராஜஸ்தான் முதல்வர் கெலாட் போட்டியிட போவதாக இருந்தது. ஆனால் இவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இல்லை. ராஜினாமா செய்தாலும், அந்த பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இதனால் அசோக் கெலாட்டை தலைவராக்க சோனியா காந்தி, ராகுல் காந்தியும் ரெடியாக இல்லை. இதையடுத்து திக் விஜய் சிங் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்கினார்.

ஆனால் அவரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று இறுதி கட்டத்தில் அறிவித்தார். கடைசியில் மல்லிகார்ஜுனா கார்கே போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. சோனியா காந்தியுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு கார்கே இந்த முடிவை எடுத்துள்ளார். நேரடியாக சோனியாவின் ஆதரவு இருப்பதால் பெரும்பாலும் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி மட்டுமின்றி பல மூத்த தலைவர்களின் நேரடி ஆதரவின் கீழ் இவர் களமிறங்குவதால் கார்கேவிற்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பல மூத்த தலைவர்கள், சில ஜி 23 தலைவர்கள் கூட கார்கேவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். பூபிந்தர் சிங் ஹூடா, திக்விஜய சிங் மற்றும் பிருத்விராஜ் சவான், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, செய்தித் தொடர்பாளர் ஏ.எம்.சிங்வி, முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கன் உள்ளிட்ட பலர் கார்கேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்தவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தம் 3 படங்களில் இதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

30க்கும் மேற்பட்டவர்கள் கார்கே பெயரை முன்மொழிந்து உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எல்லோரும் முக்கியமான தலைவர்கள். இதுவே காங்கிரஸ் கட்சியில் இவருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் பெயரை இத்தனை பெரிய தலைவர்கள் முன்மொழியவில்லை. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள், மற்றும் சில ஜி 23 தலைவர்கள் மட்டுமே பெயரை முன்மொழிந்து உள்ளனர். இதன் காரணமாக கார்கேதான் தற்போது தலைவர் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்.