உலக புகழ்பெற்ற இனிப்புகளில் ஒன்றாக ‘மைசூர் பாக்’ பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘மைசூர் பாக்’ பெயர் என்பது ‘மைசூர் ஸ்ரீ’ என மாற்ற்பட்டுள்ளது.
அதாவது ‘மைசூர் பாக்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாக கருதி ‘மைசூர் பாக்’ பெயரை ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்வீட் கடை விற்பனை செய்து வருகிறது. அதேபோல் அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்டவற்றின் பெயர்களும் கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஸ்வீட் கடையில் பெயர் மாற்றி ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு இருக்கும் போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இது தொடர்பாக அந்த ஸ்வீட் கடைக்காரர் கூறுகையில், “எங்கள் இனிப்புப் பெயர்களில் இருந்து ‘பாக்’ என்ற வார்த்தையை நீக்கியுள்ளோம். ‘மோதி பாக்’ என்பதை ‘மோதி ஸ்ரீ’ என்றும், ‘கோண்ட் பாக்’ என்பதை ‘கோண்ட் பாக்’ என்றும், ‘மைசூர் பாக்’ என்பதை ‘மைசூர் ஸ்ரீ’ என்றும் பெயர் மாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள பெயர்களில் உள்ள ‘பாக்’குகளையும் மாற்றுமாறு கிண்டலடித்து வருகிறார்கள். கோடம்பாக்கம் – கோடஸ்ரீக்கம், நுங்கம்பாக்கம் – நுங்கஸ்ரீக்கம், கீழ்ப்பாக்கம் – கீழ்ஸ்ரீக்கம் , பட்டினப்பாக்கம் – பட்டினஸ்ரீக்கம் என சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.