சிபிஐ கேட்ட கேள்விகள் என்னென்ன..?

ரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மார்ச் 17-ந் தேதி விசாரணை நடத்தினர்.

டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி, விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிபிஐ அலுவலகத்துக்கு காலையில் 10.30 மணிக்கு வரச்சொல்லி இருந்தாங்க, நான் காலை 10.15 மணிக்கு போயிருந்தேன்.மாலை 5 மணிக்கு விசாரணை முடிவடைந்தது. சிபிஐ அதிகாரிகளின் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கி இருக்கின்றேன். குறிப்பாக ஒரு சாட்சி என்ற அடிப்படையில் அன்று நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்விகளை முன்வைத்தார்கள். அந்த கேள்விகள் என்ன, அதுக்கு என்ன பதில் சொன்னேன் அப்படிங்கறது பொதுவெளியில் சொன்னால் சரியாக இருக்காது. ஒரு விசாரணை ஆணையத்தின் முன்பு வைக்கப்பட்ட கேள்வி பதில்கள். ஆகையால் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கி இருக்கின்றேன்.

சிபிஐ அதிகாரிகளுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்திருக்கலாம் அந்த அடிப்படையில் என்னை அழைச்சிருக்கலாம். அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டியது அங்க இருந்து களத்தில் நின்று பணியாற்றியதால் அதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதிலை வழங்கி இருக்கேன். மீண்டும் எப்போது வர வேண்டும் என எதுவும் சொல்லல, இனி வரும் நாட்களில் அது பற்றி பார்ப்போம்.நாங்கள எங்களை பொறுத்தவரை, திமுகவை பொறுத்தவரை, எங்களுடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பணிகளை நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு உடனடியாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறோம்.

பொதுவா இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ கூட்டங்கள், மகளிர் அணி மாநாடு, BLA 2 – BLC பூத் கமிட்டியினுடைய மாநாடுகள்னு தொடர்ச்சியாக முதலமைச்சர் அவர்கள், இறுதியாக திருச்சியில் மாநில அளவிலான 10 லட்சம் பேர் கூடிய மாநாடுகள் என தேர்தல் பணியில் மிக வேகமாக நாங்க சென்று கொண்டிருக்கிறோம். அதனால மத்தவங்கள பத்தி வரக்கூடிய கருத்துக்களை பற்றி நாங்க ஆலோசிக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. களத்தில் மக்கள் வாக்களிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் களம் என்பது முதலமைச்சர் அவர்கள் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கான சூழல் அமைந்திருக்கிறது, மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அதனால மக்களை சந்திக்கக் கூடிய பணிகளில் நாங்க சிறப்பா முன்னெடுத்திருக்கோம், தேர்தலை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.