தமிழகத்தில் ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்பு நன்கு குறைந்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 ஆக பதிவான நிலையில் தற்போது 200க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால் நோய் பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் படி, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு உள்ளிட்டவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உணவகங்கள், தியேட்டர்கள், மால்கள், கடற்கரைகள், பூங்காக்கள் அனைத்திலும் 100% வரை மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் மார்ச் 31 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்,சமுதாய, அரசு மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.மேலும் திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.
இதனிடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 200 க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 223 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 196 ஆக குறைந்துள்ளது. 50,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 196 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்கள் வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாமல் அலட்சியத்துடன் கூட்டம் கூட்டாமாக தற்போது செல்வதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டன் நாட்டில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான, “பிஏ 2” வைரஸ் தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.
இத்தகைய வைரஸ், ஒமைக்ரான் வைரஸை விட அதி வேகமாகப் பரவக் கூடியது என்றும், அதிக மரணங்களை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வைரஸ் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பரவினால் பெரும் சேதங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திலும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள், கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் போன்றவை மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளது. பிஏ 2 வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Leave a Reply