கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்திற்குள் சென்ற விஜய் விசாரணை முடிந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டார்.. விசாரணை சுமார் 4 மணி நேரம் மட்டுமே நடந்தாலும், விஜய் கூறிய எழுத்துப்பூர்வ பதிலில் கையெழுத்து பெறுவதற்காக 1 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தார்.. சுமார் 7 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் இருந்த விஜய் பின்னர் ஆதவ் அர்ஜுனா உடன் காரில் புறப்பட்டு சென்றார்.
விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இதோ…
கரூரில் மக்கள் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறுகிய இடம் என்று உங்களுக்கு தெரியுமா?
மக்கள் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?
கரூர் பிரச்சார கூட்டத்திற்கு நீங்கள் வருவதற்கு தாமதம் என்று கூறப்படுகிறதே அது உண்மையா? உண்மை எனில் தாமதமாக வர என்ன காரணம்?
நீங்கள் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக கூறப்படுவது உண்மை தானா?
மக்கள் கூட்டத்தில் அமைதியின்மையான சூழல் நிலவியது உண்மை தானா?
மக்கள் கூட்டத்தின் போது காவல்துறை தடியடி நடத்தியது பற்றி தெரியுமா?
சம்பவம் நடந்த உடனேயே நீங்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது ஏன்?
கால தாமதம் ஆனதற்கான காரணத்தை காவல்துறையிடம் கூறினீர்களா?
இந்த கேள்விக்கான பதில் முறைப்படி தட்டச்சு செய்யப்பட்டு, நகல் எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபரிடம் உறுதி செய்ய கையெழுத்து பெறப்படும்.. நேற்றைய தினம் விசாரணை முடிவடைந்த நிலையில் விஜய்யிடம் விசாரணை தொடர உள்ளதாக கூறப்படுகிறது..









