கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் கவிதா, கனிஹா ஆகிய இருவரும் 474 ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
கணிதம் பாடத்திலும் இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுத்து அசத்திய சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 10 ஆம் வகுப்பு தேர்வை 4,35,119 மாணவிகள் 4,36,120 மாணவர்கள் உள்பட 8,71,239 பேர் எழுதினார்கள். இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.88 சதவீதம், மாணவர்கள் 91.74 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1,867 அரசுப்பள்ளிகள் உள்பட 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், விருதுநகர் (97.45%), தூத்துக்குடி(96.76%), கன்னியாகுமரி(96.66%), திருச்சி(96.61%) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், 10 ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் சுந்தரராஜன் பாரதி செல்வி ஆகியோரின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில், இரண்டு பேருமே சொல்லி வைத்ததை போல 474 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
கவிதா தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண், ஆங்கிலம் பாடத்தில் 98 மதிப்பெண், கணிதம் பாடத்தில் 94 மதிப்பெண், அறிவியல் பாடத்தில் 89 மதிப்பெண், சமூக அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண் எடுத்துள்ளார், கனிஹா தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண், ஆங்கிலம் பாடத்தில் 97 மதிப்பெண், கணிதம் பாடத்தில் 94 மதிப்பெண்கள், அறிவியல் பாடத்தில் 92 மதிப்பெண், சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
முக்கியமாக கணிதம் பாடத்தில் இரண்டு பேரும் 94 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து இரட்டை சகோதரிகள் கனிஹா, கவிதா கூறுகையில், எங்கள் அப்பா சுந்தராஜன் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் இது சாத்தியமாகியுள்ளது. 11, 12 ஆம் வகுப்பில் இருவருமே பயோ மேக்ஸ் பிரிவு எடுக்க உள்ளோம்.
எங்களுக்கு ஆசிரியர்கள் நன்கு உதவினார்கள். நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினர். கல்வி கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதேபோல 12ஆம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்த செய்தியை பார்த்தோம்.
நாங்கள் நன்றாக தான் படித்தோம். இருப்பினும் இவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. ஆசிரியர்களுக்கும், கடவுகளுக்கும், எங்களின் பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் அடுத்த இலக்கு. என்றனர்.
முன்னதாக இதேபோல 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரில், அகல்யா மற்றும் அக்சயா என்ற இரட்டை சகோதரிகள் இருவரும் ஒரே மாதிரியான மதிப்பெண் (555 மதிப்பெண்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.