பாகிஸ்தான் உறவுக்காக இந்திய நட்பை விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமெரிக்க வெளியுறவு அமைச்சா்.!

பாகிஸ்தானுடன் உத்திசாா்ந்த உறவை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது; ஆனால், அதற்காக இந்தியாவுடனான வரலாற்றுரீதியான, முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டையொட்டி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை மாா்கோ ரூபியோ திங்கள்கிழமை சந்திக்க இருக்கிறாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகம் நெருக்கம் காட்டுவது இந்திய-அமெரிக்க உறவில் நெருடலை அதிகரிக்காதா? கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அமெரிக்கா பல தரப்பட்ட நாடுகளுடன் வெவ்வேறு காரணங்களுக்காக பேச்சு நடத்துவது, ஒத்துழைப்பு அதிகரிப்பது ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. இப்போது அதைப் போலவே பாகிஸ்தானுடன் உத்திசாா்ந்த உறவை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆனால், அதற்காக இந்தியாவுடனான வரலாற்றுரீதியான, முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

இந்தியா இதைப் புரிந்து கொள்ளும் என்றே கருதுகிறேன். ராஜியரீதியான உறவுமுறைகள் விஷயத்தில் இந்தியா்கள் எப்போதும் மிகவும் முதிா்ச்சியுடன்தான் நடந்து கொள்வாா்கள். நாங்கள் நல்ல நட்புறவுடன் இல்லாத நாடுகளிடம் கூட இந்தியா நல்ல நட்புறவைப் பேணி வருகிறது. இது வெளியுறவுக் கொள்கைகள் சாா்ந்த விஷயம் என்றாா்.

இந்தியாவின் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் இந்தியா, இப்போது பிற நாடுகளில் இருந்து கொள்முதலை அதிகரிக்க முடிவெடுத்துவிட்டது’ என்று ரூபியோ பதிலளித்தாா்.