இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை கட்டாயம் கடைப்பிடிப்போம் – பாகிஸ்தான் உறுதி.!!

ஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. அதன்பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன.

இதனைத் தொடர்ந்து மே 12-ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டு தரப்பும் எந்த ஒரு துப்பாக்கிச்சூடு அல்லது எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற உறுதிப்பாட்டினைத் தொடர்வது தொடர்பான விஷயம் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்த்தை கடைப்பிடிக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் கூறியுள்ளபடி உண்மையாக நடந்துகொள்வோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்கிறோம்.

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் உள்ளது. எனவே, போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி தேவை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.