அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டுவோம் – ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

புதிய பொதுக்குழு உறுப்பினர்களுடன் விரைவில் அதிமுக பொதுக்குழுவை தாங்கள் கூட்டுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கடந்து ஜூலை 11ந்தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தாம்தான் தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரை
ஆதரவாளர்கள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். பின்னர்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் புதிய
நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருவதாகவும் அதற்கு பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் கூறினார்.

அதிமுகவுக்கு புதிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக கூறிய ஓபிஎஸ், விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திப்பேன் என தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் அமித்ஷா சந்திப்பின்போது எந்த விதமான அரசியலும் தாம் பேசவில்லை என விளக்கம் அளித்தார். மெகா கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.