அருணாச்சல் எல்லையில் போர் பதற்றம்… களமிறங்கிய “கருடா” அதிரடி படை – ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமமாம்- அலறும் சீனா..!

ட்டாநகர்: சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு கருடா சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

கருடா சிறப்புப் படையினரின் வருகை குறித்து தெரியவந்ததால், சீன ராணுவ வீரர்கள் சற்று அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மிக மிக துல்லியமான, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான வீரர்களாக அறியப்படும் கருடா சிறப்புப் படையினர்தான், 2 ஆண்டுகளுக்கு முன்பு லடாக்கில் சீன வீரர்களை விரட்டியடித்ததில் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒருபகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அவ்வப்போது எல்லைப் பகுதிக்குள் நுழைவதும், பின்னர் அங்கிருந்து சென்றுவிடுவதும் வாடிக்கையானது தான். ஆனால், கடந்த 9-ம் தவாங் செக்டார் பகுதிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்த 200- சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீனப் படையினர் பின்வாங்கினர். இதன் தொடர்ச்சியாக, அருணாச்சலை ஒட்டிய தங்கள் எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீனா குவித்து வருகிறது. அதேபோல, இந்திய ராணுவமும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதால் வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சலில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் அங்கு ராணுவம் உச்சக்கட்ட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய விமானப் படையின் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தொடர்ச்சியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தான், இந்திய விமானப் படையின் ஒரு பிரிவான கருடா சிறப்புப் படை வீரர்கள் 1000 பேர் அருணாச்சல் எல்லையில் களம் இறக்கப்பட்டுள்ளனர். கருடா சிறப்புப் படையினரின் வருகையை அறிந்ததுமே சீனப் படையினர் கதிகலங்கி போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் பல இடங்களில் முகாமிட்டிருந்த சீனப் படையினரை ஓட ஓட விரட்டியடித்தது இந்த கருடா படை வீரர்கள்தான். கருடா படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலை சீனப் படையினரால் சிறிது கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அருணாச்சலில் குவிக்கப்பட்டிருக்கும் போது, இந்த 1000 கருடா படை வீரர்கள் அங்கு எதற்கு? இத்தனை ராணுவ வீரர்களை கண்டு பயப்படாத சீனப் படையினர் இந்த 1000 வீரர்களை பார்த்தா பயப்படப் போகிறார்கள்? என்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுவது சகஜம்தான். ஆனால், கருடா படையை பற்றி தெரிந்தவர்கள் இந்த கேள்விகளை கேட்க மாட்டார்கள். ஏனெனில், ஒரு கருடா படை வீரர் 30 ராணுவ வீரர்களுக்கு சமம். மேலும், இந்திய ராணுவத்தாலேயே ஒரு டாஸ்க்கை (task) முடிக்க முடியாத போதுதான் அங்கு கருடா வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள். அந்த அளவுக்கு புத்திக்கூர்மையும், உடல் – மன வலிமையும் படைத்தவர்கள் தான் கருடா படையினர்.

முதலில், இந்த கருடா படை உருவாக்கப்பட்டது 2004-ம் ஆண்டில்தான். 2001-ம் ஆண்டு காஷ்மீரில் விமானப் படை தளங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அப்போது, விமானப் படை தளங்களை பாதுகாக்கவும், தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடவும் உருவாக்கப்பட்டதே கருடா படை. விமானப் படையின் ஒரு பிரிவு என்றாலும், இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பிரத்யேகமானவை. இன்னும் சொல்லப்போனால், இவர்களின் அன்றாட பணியே பயிற்சி பெறுவதுதான். சிறிது காலம் ராணுவத்திலும், பின்னர் கடற்படையிலும், அடுத்து விமானப்படையிலும் இந்த கருடா படையினருக்கு பயிற்சி வழங்கப்படும். இது சுழற்சி முறையில் நடந்து கொண்டே இருக்கும். இடை இடையே, சிஆர்பிஎப், திபெத் போலீஸ் படை ஆகியவற்றிலும் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவத்திலும் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

இதனால், போர்க்காலங்களில் அனைத்து படைகளிலும் இவர்கள் இணைந்து எதிரிகளுடன் சண்டையிடுவார்கள். மேலும், முப்படைகளிலும் பயிற்சி பெற்றிருப்பதால் இவர்கள் அசாதாரண போர் வீரர்களாக இருப்பார்கள். ஒரு கருடா வீரர் எந்தவித ஆயுதமும் இல்லாமல் வெறும் கையால் குறைந்தது 20 தற்காப்புக் கலை நிபுணர்களை வீழ்த்தும் திறன் படைத்தவர்கள். அதுமட்டுமல்லாமல், சாதாரண கைத்துப்பாக்கி முதல் மிக நவீன இயந்திரத் துப்பாக்கிகள் வரை கையாளும் திறமைக் கொண்டவர்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்களால் கையாள முடியாத ஆயுதமே இருக்க முடியாது என்கின்றனர் மூத்த ராணுவ அதிகாரிகள். இந்தக் கருடா படை வீரர்களின் தாரக மந்திரமே “தாக்குதலே பாதுகாப்பு” (Defence by offence) என்பதுதான். எனவே, ஒரு இடத்தில் கருடா படை வீரர்கள் வந்துவிட்டாலே கிட்டத்தட்ட அந்த வேலை முடிந்தது மாதிரிதான் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு கருடா படைப்பிரிவில் 2,000 வீரர்கள் இருக்கிறார்கள்.