சிங்கப்பூரின் 96 மணிநேர விசா இல்லா போக்குவரத்து வசதி (VFTF) மூலம், நீங்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க முடியும். இந்த திட்டத்தின் மூலம், சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் பயணிகள், விசா இல்லாமல் அதிகபட்சம் 96 மணிநேரம் (4 நாட்கள்) சிங்கப்பூரில் தங்கும் வசதியை கொடுக்கிறது.
இந்த திட்டம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் இடைப்பட்ட பயணிகளுக்காக (Transit) உருவாக்கப்பட்ட சிறப்பு வசதியாகும். இந்தியா, சில குறிப்பிட்ட சீனப் பயணிகள், சி.ஐ.எஸ் (CIS) நாடுகள், ஜார்ஜியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் உக்ரைன் குடிமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த அனுமதி தானாகக் கிடைக்காது. சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையத்தின் (ICA) ஒப்புதலுக்கு உட்பட்டது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இந்தச் சலுகையைப் பெற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் என்பது உங்கள் பயணத்தில் ஒரு தங்கும் இடமாக (Stopover) மட்டுமே இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் சிங்கப்பூர் வழியாக வேறோரு நாட்டிற்குச் செல்பவராக இருக்க வேண்டும். சிங்கப்பூருக்குள் நீங்கள் எந்த வழியில் வேண்டுமானாலும் நுழையலாம் (விமானம்/கப்பல்/சாலை), ஆனால் 96 மணிநேரத்திற்குள் விமானம் அல்லது கடல் வழியாக மட்டுமே வெளியேற வேண்டும்.
மேலே குறிப்பிட்ட நாடுகளில் ஒன்றின் ‘சிங்கிள் ஜர்னி விசா’ மட்டுமே இருந்தால், அதை வைத்து நீங்கள் அந்த நாட்டிற்குச் சென்றுவிட்டு, திரும்பும் வழியில் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க விசா இல்லா போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த நாட்டை விட்டுப் புறப்பட்ட பிறகு நீங்கள் இந்தியாவிற்குத் திரும்பியிருக்கக் கூடாது.
நீங்கள் விமான நிலையத்தின் ஏர்சைடு (Airside) பகுதியிலேயே இருந்து, குடிவரவு (Immigration) அதிகாரிகளைச் சந்திக்காவிட்டால், உங்களுக்கு விசா தேவையில்லை. ஆனால், உங்கள் உடமைகளை (Baggage) எடுக்கவோ அல்லது மீண்டும் செக்-இன் செய்யவோ நீங்கள் இமிக்ரேஷன் பகுதியைத் தாண்டி வர வேண்டியிருந்தால், நீங்கள் கண்டிப்பாக விசா இல்லா போக்குவரத்து வசதி பெறும் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.








