தொடர்ந்து பரப்புரைக்காக தயார் செய்யப்பட்ட வாகனத்தில் ஏறி அமர்ந்த விஜய் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு செல்ல முற்பட்டார். ஆனால் வழியெங்கும் அவருக்கு ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ஒன்று கூடி வரவேற்பு அளித்ததில் விமான நிலையத்தின் வெளியே வரவே அவருக்கு 45 நிமிடங்கள் ஆகிவிட்டது.இப்படியான நிலையில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு அவர் செல்ல மிகவும் தாமதம் ஏற்பட்டது. காலை 10.30 மணி முதல் 11.15 மணி வரை மட்டுமே காவல்துறையினர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டதட்ட 40 நிமிடத்திற்கும் மேலாக தாமதாக வருகை தரும் அளவுக்கு சென்றது. காவல்துறை விதித்த நிபந்தனைகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்கள் தவிர எதுவும் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் தொண்டர்கள் விஜயின் வாகனத்தை பின் தொடரக்கூடாது என தலைமை கழகமும் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொண்டர்கள் பைக்கில் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். இவர்களின் வாகனத்தை டிவிஎஸ் டோல்கேட் அருகே மடக்கிய போலீசார் சாவிகளை பறிமுதல் செய்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு செல்ல அறிவுறுத்தினர். விஜய் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள நேர்ந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விஜயின் அரசியல் பேச்சைக் கேட்க இளம் வயதினர் அதிக அளவில் மரக்கடை பகுதியில் கூடியுள்ளனர். இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் என குடும்பம் குடும்பமாக விஜயை காணும் ஆர்வத்தில் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். சாலையில் மட்டுமல்லாது மரக்கடை பகுதியில் உள்ள கட்டிடங்களின் மேலேயும் ஏறி நின்று தங்கள் தலைவரை பார்த்து விடமாட்டோமா என ஆவலுடன் ரசிகர்களும் தொண்டர்களும் காத்திருப்பதை காண முடிந்தது.
 
		

 
				        



