சென்னை: தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், தவெக தேர்தல் களத்தில் திமுகவுக்கு உதவக்கூடும் என்கிறது இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்.
திமுக வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவப்போகிறாராம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மறுபுறமும் தேர்தல் பணிகளில் பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின் தவெகவும் தீவிரமாக கோதாவில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து Mood of the Nation என்ற தலைப்பில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணி இன்றும் வெற்றி பெற வாய்ப்புள்ளது, தமிழ்நாட்டின் 39 இடங்களில் 36 இடங்களை திமுக வெல்லும் என்று இந்த சர்வே கணித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்ட போதிலும், பாஜகவால் சில இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. பிப்ரவரி 2025 இல் நடத்தப்பட்ட மூட் ஆஃப் தி நேஷன் சர்வே, திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 மக்களவைத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் 47 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த இந்தியா கூட்டணிக்கு பிப்ரவரி மாதத்தில் 52 சதவீதமாக உயர்ந்திருந்த வாக்கு சதவீதம், தற்போது 48 சதவீதமாக குறைந்திருப்பதாக இந்தியா டுடே – சி வோட்டர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே களம் கண்டு, மொத்தமாக 41 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த ஆதரவு பிப்ரவரியில் 21 சதவீதமாக குறைந்ததாகவும், மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி உருவான நிலையில் தற்போது 37 சதவீதமாக தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ல் 12 சதவீதமாக இருந்த பிற கட்சிகளின் வாக்கு வங்கி, பிப்ரவரியில் 7 சதவீதமாக சரிந்ததாகவும், தற்போது தவெக தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ள நிலையில், பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாக இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணிக்கு, முன்பை விட வாக்குகள் சற்று சரிந்திருந்தாலும் விஜய்யின் வருகை திமுகவுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்கள் விஜய்க்கு வாக்களிக்கக் கூடும் என்றும் அது அதிமுக – பாஜகவுக்கு விழ வேண்டிய வாக்குகளைப் பிரிக்கும், எனவே இது திமுகவுக்கே மறைமுகமாகப் பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். ஆனால், அவரது அரசியல் வருகை திமுகவுக்கு தான் பலன் அளிக்கும் என்கிறது இந்த சர்வே முடிவு. திமுக எதிர்ப்பு வாக்குகளைத்தான் விஜய்யும் பிரிப்பார் என்பதால், அதிமுக – பாஜகவுக்கு பெருத்த அடி விழும் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு.