தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு உள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அய்யாசாமிப்பட்டியில் இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முழுக்க, முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம் என்றும், பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், 80% அளவில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது








