இதிலும் செம கெத்து காட்டும் விஜய்…

தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை பார்ப்பதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் விஜய்யின் வேட்பு மனு விவரங்களை 3.25 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30 ஆம் தேதி, சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய். அந்த மனுவில், தன் மீது எவ்வித குற்ற வழக்கும் இல்லை என விஜய் தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டின்போது, தன் பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படும் புகாரில், கூடக்கோவில் போலீசில் வழக்கு பதிவுபட்டுள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்த குற்ற வழக்கு பற்றி, காவல் துறையிடமிருந்து எந்தவித சம்மனோ, தகவலோ வரவில்லை எனவும் இப்போது தெரிய வந்ததால், இதில் குறிப்பிட்டுள்ளதாகவும் காரணத்தை விஜய் கூறியுள்ளார். இதனால், பெரம்பூரில் தாக்கல் செய்த விஜயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், சென்னை கொளத்துாரில் பிரச்சாரம் செய்யும்போது, விதிகளை மீறியதாக விஜய் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவலையும் பெரம்பூர் மனுவில் இணைத்து புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதேபோல், பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் வயது 52 என விஜய் குறிப்பிட்டுஉள்ளார். ஆனால், திருச்சி கிழக்கில் 51 வயது என விஜய் குறிப்பிட்டுள்ளார். விஜயின் வேட்பு மனுவில் இப்படி முரணான தகவல்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், இரண்டு தொகுதிகளிலுமே கூடுதல் பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரங்களைப் பார்ப்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து மற்றும் பின்னணி விவரங்களை அறிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் அவரது பிரமாண பத்திரத்தை சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட விஜய்யின் பிரமாண பத்திரங்களை 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் பிரமாண பத்திரங்களை சுமார் 21 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். மொத்தமாக விஜய்யின் பிரமாண பத்திரங்களை 3.25 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.33 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.