கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொடைக்கானல் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
இதையொட்டி, அவரை வரவேற்க கட்சியினர் மற்றும் ரசிகர்கள் நேற்று காலை முதலே விமான நிலையப் பகுதியில் திரண்டனர். இரும்பு தடுப்புகளை தாண்டி விமான நிலையத்துக்குள் செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், முக்கிய நிர்வாகிகளை மட்டும் விமான நிலையத்துக்குள் அனுமதித்தனர். மாலை 4 மணிக்கு விமானத்தில் வந்திறங்கிய விஜய்க்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்த தவெக தொண்டர்கள்.
இதனிடையே, தடுப்புகளை தள்ளிவிட்டும், சுவர் ஏறி குதித்தும் ரசிகர்கள் விமான நிலையத்துக்குள் புகுந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த விஜய், வேனில் ஏறி நின்றபடி தொண்டர்கள், ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். விமான நிலையத்திலிருந்து பெருங்குடி சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்கள், வரவேற்று உற்சாக குரல் எழுப்பி அவரை வரவேற்றனர்.
பின்னர், நாகமலை புதுக்கோட்டை வழியாக கொடைக்கானலுக்கு விஜய் காரில் சென்றார். அவரது வருகையையொட்டி விமான நிலையப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஏராளமான ரசிகர்கள் தடுப்புகளை தாண்டிச் சென்றதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். விஜய் வருகை காரணமாக விமான நிலையம், பெருங்குடி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
களத்துக்கு வராமல், பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் விஜய் கட்சி நடத்துவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. கடந்த மாதம் 27-ம் தேதி கோவையில் விஜய் காரை பின் தொடர்ந்த தொண்டர்கள் பலர் விபத்தில் சிக்கினர். இந்நிலையில், ஜனநாயகன் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்டுச் சென்ற விஜய், சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக நேற்று செய்தியாளர்ககளுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
மதுரை மக்களுக்கு என்னுடைய வணக்கம். உங்கள் அன்புக்கு கோடானகோடி நன்றிகள். ஜனநாயகன் படத்தின் பணிகள் தொடர்பாக கொடைக்கானல் செல்கிறேன். கூடிய விரைவில் மதுரை மண்ணுக்கு நமது கட்சி சார்பில், வேறொரு சந்தர்பத்தில் உங்களை சந்தித்து நான் பேசுகிறேன்.
தற்போது, மதுரை விமான நிலையத்தில் உங்களை சந்தித்தபிறகு, நான் என் வேலையை பார்க்கப் போகிறேன். நீங்களும் பத்திரமாக அவரவர் வீட்டுக்குச் செல்லுங்கள். யாரும் எனது காருக்கு பின்னால், இருசக்கர வாகனத்தில் வேகமாகவும், ஆபத்தான வகையிலும் பின் தொடர வேண்டாம். ஏனென்றால், அந்த காட்சியை பார்க்கும்போது எனக்கு பதற்றமாக இருக்கிறது.
விரைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்தித்துப் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். மதுரை விமான நிலையத்தில் இந்த தகவலை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதனால்தான் இங்கேயே சொல்லிவிட்டு செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.