சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார்.
37 குடும்பங்களை மாம்மல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து விஜய் தனித்தனியாக ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட விவரங்களையும், உதவி கோரிக்கைகளையும் விஜய் எழுத்துப்பூர்வமாகயும் பெற்று வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில் அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை.
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார்.
அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், தவெக சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. ஆனால், விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மண்டபம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.





