சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள், நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பான தவறுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இந்த சம்பவத்துக்குப் பிறகு எழுந்தன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீதி கோரி போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணிக்க உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டது. சிபிஐ குழுவினர் முதற்கட்டமாக கரூரில் நேரடியாக விசாரணை நடத்தினர். அங்கு சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்ததுடன், பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி செய்யப்பட்டு இருந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகள் யார் பொறுப்பில் இருந்தன, கூட்டம் கட்டுப்பாட்டை இழந்தது எப்படி என்பதுபோன்ற பல விஷயங்கள் குறித்து அவர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையிலும் தவெக நிர்வாகிகள் பங்கேற்று ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தின் முழுப் பொறுப்பை தெளிவுபடுத்துவதற்காக தவெக தலைவர் விஜயை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ முடிவு செய்தது. அதன்படி, விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு, இன்று டெல்லியில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் சாலையில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழ்ச்சி ஏற்பாட்டில் தனது பங்கு என்ன?, நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள், பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், இந்த விசாரணை ஒரே நாளில் முடிவடையாமல், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நீடிக்கலாம் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. சிபிஐ விசாரணைக்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்படுகிறார்.
அவருடன் சட்ட ஆலோசகர்கள் மற்றும் முக்கிய உதவியாளர்களும் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி பயணத்தின் போது விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெக சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ரசிகர்கள் கூடுவதால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்க இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.









