உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் குஷியான விஜய்… உற்சாகத்தில் தொண்டர்கள்.!!

நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் கொடி, தங்கள் அமைப்பின் கொடியை போல் உள்ளதாக கூறி தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் அந்த சபையின் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், தவெக தலைவர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18 (அதாவது இன்று) அன்று ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தார். தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடியை தான் தவெக பயன்படுத்தியுள்ளது என்று கூறி விட முடியாது. இரு கொடிகளையும் பயன்படுத்தினால் தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது எனக்கூறி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி விஜய்யின் தவெக தான். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக தமிழகத்தில் நல்லாட்சி தரும் என்று தவெக தலைவர் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்ததால் விஜய்க்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவு உள்ளது.

சினிமா வேறு. அரசியல் வேறு. ரசிகர்கள் எல்லாம் வாக்காளர்களாக மாறி விட மாட்டார்கள். நடிகர் விஜய் முதலில் களத்தில் இறங்கி மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்க வேண்டும். அப்போது தான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும்” என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில், தவெகவின் பிரம்மாண்ட மாநாடு மதுரையில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது விஜய்யையும், தவெக தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.