விஜய் ஆஜராக இன்று விலக்கு!

விஜய் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த சிபிஐ அவர் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய், கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், கைக்குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் விசாரணைக்காக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜனவரி 6-ம் தேதி சம்மன் அனுப்பியது.அதன்படி ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்தது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மீண்டும் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.இந்நிலையில், 10ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரியும் விஜய் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விஜய் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட அந்த கோரிக்கைகளை சிபிஐ பரிசீலனை செய்ததாகவும், இதனையடுத்து அவர் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய்க்கு புதிய சம்மன் அனுப்பப்படும் எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, விசாரணை டெல்லி அலுவலகத்தில் தான் நடைபெறும் என்றும், வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் தற்போது இல்லை எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.