ரூ.17 லட்சம் வரை… வெளியான முக்கிய அறிவிப்பு..!

டெல்லி: மத்திய பட்ஜெட் வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இதற்கிடையே ரூ.17 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லாத வகையில் புதிய ஒரு அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம் போல பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாகச் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014க்கு முன்பு வரை வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது. அதன் பிறகு இது பல்வேறு சமயங்களில் உயர்த்தப்பட்டன. குறிப்பாகக் கடந்த 2024ம் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சம் என்பதில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது மிடில் கிளாஸ் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. New tax regime எனப்படும் புதிய வரி விதிப்பு முறைகளில் இருப்போர் ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

இந்த புதிய வருமான வரி முறையை மத்திய அரசு கடந்த 2020ல் அறிமுகப்படுத்தியது. பழைய முறை, புதிய முறை என இரண்டில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என மக்களுக்கு சாய்ஸ் வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும், புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பலரும் புதிய முறையையே தேர்வு செய்தனர்.

புதிய முறையில் உச்சவரம்பு அதிகமாக இருந்தாலும் கூட அதில் சேமிப்பை ஊக்குவிக்கும் சலுகைகள் இல்லை என்று பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் விமர்சித்து வந்தனர். அதாவது பழைய முறையில் உச்சவரம்பு குறைவாக இருந்தாலும் கூட சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரியைத் தவிர்க்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸுக்கு கூட வரி விலக்கு இருந்தது. ஆனால், புதிய முறையில் மிகக் குறைந்த ஆப்ஷனே இருந்தது.

இந்தியா போன்ற நாட்டில் இதுபோல திட்டங்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் முதலீடுகளைச் செய்வார்கள் என்பதால் புதிய முறைக்கும் இத்திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கலாகும் இந்த படஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

புதிய வரி விதிப்பு முறையில் 80C மற்றும் 80D முதலீட்டுச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.. அதன்படி அறிவிப்பு வந்தால் ₹17 லட்சம் வரையிலான வருமானத்தை வரி இல்லா நிலை ஏற்படும். சேமிப்பை ஊக்குவிக்க வரி செலுத்துவோரையும் ஈர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பட்டயக் கணக்காளரும் வரி ஆலோசகருமான ருச்சிதா வகானி இந்தத் தகவலைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

புதிய முறையில் இதில் ₹75,000 நிலையான கழிவு (standard deduction), 80CCD(2) கீழ் NPS பங்களிப்பு மட்டுமே இருக்கிறது. அதைத் தாண்டி பழைய முறையில் இருந்தது போல 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் கிடைக்கும் முக்கியமான சலுகைகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது. தற்போது 87A பிரிவின் கீழ் ₹60,000 ரிபேட் மற்றும் நிலையான கழிவுடன், ₹12.75 லட்சம் வரை வருமானம் வரி செலுத்தத் தேவையில்லை.

மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு மட்டும் வெளியானால்.. சரியான முதலீடு செய்வோருக்கு ரூ.17 லட்சம் வரை வரி செலுத்த வேண்டி இருக்காது. அதேபோல ரூ.20 லட்சம் வரை சம்பாதிப்போருக்கும் கூட தற்போதுள்ள வரிச் சுமையில் ரூ.1 லட்சம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.