கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னை ,பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கவரி துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில் 2 பயணிகளின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அந்த 2 பேரையும் அதிகாரிகள் பிடித்து தனி அறைக்கு அழைத்து சென்று உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் பொட்டலம் ,பொட்டலமாக 6.45 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.இந்த வகை கஞ்சா வெளிநாட்டில் அதிக அளவில் கிடைப்பது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அந்த 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த பகத் மான் முஜீப் ( வயது 34) சுகையில் உபயத்துல்லா ( வயது 31) என்பதும் , இதை சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய கொண்டு செல்வதும் தெரிய வந்தது . உடனே அதிகாரிகள் அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6:45 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ 7 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 18 லட்சம் மதிப்புள்ள டிரோன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . அதை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி, பாண்டித்துரை ஆகிய 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா கடத்தல் – கேரளாவை சேர்ந்த இருவர் கைது.!!
