துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பல சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தது.
பாகிஸ்தான் அரசை கண்டிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா பரிசளிப்பு நிகழ்ச்சிகள் பங்கு பெற வரவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
அதன்படி போட்டி நடுவராக செயல்படும் ஆண்டி பயோகிராப்டை ஆசிய கோப்பையில் இருந்து நீக்கவில்லை என்றால் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து தாங்கள் விலகி விடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த போட்டி வரும் 17ஆம் தேதி துபாயில் நடைபெற இருந்தது. இதற்கு காரணம், போட்டி தொடங்குவதற்கு முன்பு போட்டி நடுவரான ஆண்டி பயோகிராஃப் தான் இரு அணி கேப்டன்களும் கைகுலுக்க வேண்டாம் என சூரியகுமார் மற்றும் சல்மான் அலி ஆகாவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.
போட்டி நடுவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.ஒருவேளை யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் புறக்கணித்தால் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதன் மூலம் ஓமன், யுஏஇ அணிக்கு எதிராக ஆட்டத்தில் யுஏஇ அணி வெற்றி பெற்றால், அந்த அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
ஒருவேளை பாகிஸ்தான் அணி வெளியேறினால் இந்த தொடருக்கு அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தானை சேர்ந்த மோஷின் நக்விதான் இருக்கின்றார். இதனால் போட்டி நடுவரான ஆண்டிபைக்ராப்டை அவர் நீக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் கைகுலுக்க வில்லை என்பதற்காக போட்டி நடுவர் மீதுகுறி வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.