வாஷிங்டன்: அமெரிக்கா பிரிட்டன் இடையே மிக முக்கியமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிக்குப் பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட உலக நாடுகள் முயன்று வருகின்றன.
இந்தச் சூழலில் முதல் நாடாக பிரிட்டன் டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக மாற்றப்போகிறேன் எனச் சொல்லி டிரம்ப் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாகக் கடந்த மாதம் தொடக்கத்தில் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதாவது உலக நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாகவும் இதனால் பதிலுக்கு அந்த நாடுகள் மீதும் வரியை விதிப்பேன் என டிரம்ப் இந்த வரிகளை அறிவித்தார். பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்திருந்தார். இருப்பினும், இந்த வரி அமலுக்கு வருவதற்குள்ளேயே மீண்டும் பிரஸ் மீட் நடத்திய டிரம்ப் வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அமெரிக்க டிரஷரி பாண்டுகள் பலத்த அடி வாங்கியதாலேயே டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த டிரம்ப், அதற்குள் உலக நாடுகள் வர்த்தக டீலை இறுதி செய்யும் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் இந்தியா உட்படப் பல்வேறு உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தச் சூழலில் தான் திடீரென ஓரிரு நாட்களுக்கு முன்பு உலகையே உலுக்கும் ஓர் அறிவிப்பை வெளியிடப்போவதாக டிரம்ப் அறிவித்தார். அப்படி என்ன அறிவிப்பு என அமெரிக்கர்கள் அதை எதிர்நோக்கி இருந்தனர்.
இதற்கிடையே அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைத்த பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், முதல் நாடாகப் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கூட்டாக இந்த வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர். ஓவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிரிட்டன் அதன் வரிகளை 5.1 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாகக் குறைக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. பிரிட்டனின் இந்த முடிவை வரவேற்ற டிரம்ப் வரலாற்றில் இது முக்கியமான நாள் என குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “இது அமெரிக்காவுக்கு ஒரு மிகப்பெரிய சந்தையைத் திறந்துவிடும்” என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்டனைப் பொறுத்தவரை முந்தைய பிரதமர்கள் எடுத்த முடிவால் அந்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் அமெரிக்கா வரி விதித்தால் அது பிரிட்டன் பொருளாதாரத்தைக் காலி செய்துவிடும். இதன் காரணமாகவே அவசர அவசரமாகப் போய் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டிரம்ப் என்ன தான் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்திவைத்தாலும் உலகின் அனைத்து நாடுகளின் அனைத்து இறக்குமதிகளுக்கும் மீதும் 10% வரியை அறிவித்திருந்தார். இப்போது பிரிட்டன் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட நிலையில், இந்த 10% வரி இருக்குமா இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது. இது குறித்து விரைவில் விளக்கமளிக்கும் எனத் தெரிகிறது.