11ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியை… போக்சோவில் கைது செய்த திருச்சி போலீஸ்.!!

திருச்சி: திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த அதே பள்ளியை சேர்ந்த 26 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவனின் பெற்றோர் கடந்த 11ம் தேதி துறையூர் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில், எம்ஏ, பிஎட், எம்பில் முடித்து விட்டு மாணவன் படிக்கும் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சிக்கத்தம்பூரை சேர்ந்த சர்மிளா(26) அதே தேதியில் மாயமானது தெரிய வந்தது. இவர் 6 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வேலை பார்த்து வந்ததும், மாணவன் 7ம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு சர்மிளா பாடம் நடத்தியதாகவும், கொரோனா காலத்தில் இருவரும் செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் ஆசிரியையின் செல்போன் ஐஎம்ஈஐ எண்ணைக் கொண்டு போலீசார் டிரேஸ் செய்ததில் நேற்று முன்தினம் மாலை திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சர்மிளா தனது தோழி வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது. துறையூர் எஸ்ஐ கலைச்செல்வன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் ஆசிரியை மற்றும் மாணவனை துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது.

துறையூர் காவல் நிலையத்தில் நேற்று இருவரிடமும் விசாரணை முடிந்ததும், சர்மிளாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ஆசிரியையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.