திருப்பதி திருக்குடை ஊர்வலம்… சென்னையில் விண்ணை பிளந்த “கோவிந்தா” “கோவிந்தா” கோஷம்.!!

சென்னையில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம், இவ்வாண்டு 21-வது ஆண்டாக இன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யா தீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி கொடியை அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்து திருப்பதி குடை ஊர்வலம் கிளம்பியது.

இந்நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, விசுவ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்குடைகள் ஊர்வலத்தை வழிநெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷம் எழுப்பினர். இதனால் இன்று காலை என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதனைச் சூழ்ந்த இணைப்பு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

திருக்குடைகள் இன்று பிற்பகல் கவுனி தாண்டிய பின் சால்ட் கொட்டகை, சூளை, ஓட்டேரி, கொன்னூர், தாக்கர் சத்திரம் வழியாக சென்று, இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் தங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திருவிகநகர், பெரம்பூர் வழியாக வில்லிவாக்கம் சென்று அங்கு தங்கும். தொடர்ந்து 24-ந்தேதி பாடி, அம்பத்துார், முகப்பேர், திருமுல்லைவாயில், 25-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக 26-ந்தேதி திருவள்ளூர் மற்றும் திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. 27-ந்தேதி திருமலையில் நடைபெறும் இறுதிக்கட்ட விழாவில், மாலை 3 மணிக்கு மாடவீதியில் வலம் வந்த பின் திருக்குடைகள் வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் ஏழுமலையானுக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இவ்வூர்வலத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தென் இந்தியாவின் மிகப் பிரமாண்ட ஆன்மிக நிகழ்வாக உருவெடுத்துள்ளது.