திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேரை மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்க மறுத்தால் மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் குறிப்பிடும் 5 பேரை வழிபாடு நடத்த அனுமதித்தால் வழக்கு முடித்துவைக்கப்படும் எனவும், இது தொடா்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மார்ச் 4-ம் தேதி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மலை மீதுள்ள தீபத்தூணில் 5 பேரை வழிபட நடத்த அனுமதிக்கும் புதிய நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.இதனையேற்றுக் கொண்ட நீதிபதி, வரும் 18-ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோயில்பட்டர்கள் மலர் தூவி பூஜை நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற தகவலுடன் கோயில் நிர்வாகம் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனில், மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் , அறங்காவலர் குழு உறுப்பினர், கோயில் இணை ஆணையர் உள்ளிட்டோர் மீது அன்றே குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம் தீபதூண் விவகாரம்






