சிறையில் இருந்து விடுதலையான 24 மணி நேரத்திலேயே மோட்டார் சைக்கிள் திருடிய பலே திருடன் மீண்டும் கைது.!!

கோவை, பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் அவரது கடையறையில் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர் அவரது மோட்டார் சைக்கிளை நைசாக திருடிக் கொண்டு சென்று விட்டார். கடைக்கு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதால் வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.
பல இடங்களில் சென்று மோட்டார் சைக்கிளை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து அவரது மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் த ள்ளி கொண்டு செல்வதை பார்த்து அவரை மடக்கி பிடித்தார். அப்போது அவர் வேலுச்சாமியின் மோட்டார் சைக்கிளை திருடிச் செல்வது தெரியவந்தது.
உடனே அவரை வேலுச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பீளமேடு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் மற்றும் போலீசார் பிடிபட்ட வாலிபரை விசாரணை செய்தனர்.
அப்போது அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த முருகேசன் (வயது 33) என்பதும் அவர் மீது 13 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
கடந்த ஜனவரி மாதம் அந்தியூரில் திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் முருகேசன் அடை க்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு நேற்று முன்தினம் 20 ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவை சிறையில் இருந்து முருகேசன் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்..