இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்..!

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரினால் கோதுமையின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. போர் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கிருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படாத நிலை இருந்தது. ஐ.நா. சபையின் தலையீடு காரணமாக கடந்த மாதம் முதல் மீண்டும் அந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்நாட்டுத் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு நமது நாட்டிலேயே உள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்துக்காக, போதுமான கோதுமை இருப்பையும் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.