கோவை : தமிழக சட்டமன்றத்திற்கான வாக்கு பதிவு வருகிற 23-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 27 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,062 இடங்களில் 3,563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி அறிந்து கொள்ளும் வகையில் பூத் சிலிப் வழங்கப்படும். கடந்த தேர்தலில் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலீப் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம்பெறாது . வாக்காளரின் பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவை இடம்பெறும் . இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் வீடுவீடாக பூத் சிலிப் எனப்படும் தகவல் சீட்டு வழங்கும் பணி வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது. இந்த பணியில் 3,563 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இதனை ஒரு ஆவணமாக கருதி வாக்களிக்க அனுமதிக்க முடியாது. வாக்காளர்கள் வாக்களிக்க வரும் போது தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உட்பட தேர்தல் ஆணையம் அறிவித்த 16 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிலவாக் காளர்கள் கடந்த தேர்தலில் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு பதிலாக வேறு வாக்கு சாவடியில் வாக்களிக்க வேண்டியது இருக்கும் எனவே இந்த பூத் சிலிப்பில் வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி எண் முகவரி உள்ளிட்டவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி







