இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இவர் கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணுவ விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவைக்கு வருவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பிலும் சிறப்பான வரவேற்பளிக்கபட்டது. பின்னர் அவர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் கொடிசியா வளாத்துக்கு சென்றார். வழிநெடுக்கிலும் மக்கள் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு நின்று அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கொடிசியா வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். இதையடுத்து கார் மூலம் சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.மாலை 4 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அதை தொடர்ந்து கார் மூலம் பேரூர் சென்ற துணை ஜனாதிபதி சி.பி .ராதாகிருஷ்ணன் அங்குள்ள தமிழ் கல்லூரியில் நடைபெறும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொடிசியா வளாகம் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பேரூர் பகுதியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ஜனாதிபதி வருகையையொட்டி மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.துணை ஜனாதிபதி சி. பி ராதாகிருஷ்ணன் வருகையை யொட்டி கோவையில் நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.விமான நிலையம்,கொடிசியா வளாகம், மாநகராட்சி அலுவலகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், தமிழ் கல்லூரி ஆகிய இடங்களுக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று கோவை வந்தார் துணை ஜனாதிபதி.!!





