வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பரவலாக மழையைப் பெற்ற தமிழகத்தில்தற்போது கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் வெப்பத்தைத் தணிப்பதற்காக இளநீர், தர்பூசணி போன்றவற்றைத் தேடி வாங்கி உண்கின்றனர்.
இதனால் கோடைக்காலம் துவங்கும் முன்னரே கோவை பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை களைகட்டத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சாலையோரம் தற்காலிகமாகத் தர்பூசணி கடைகள் முளைத்திருக்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் வெப்பம் துவங்கியுள்ளதால் தண்ணீர் பழத்தின் மீதான மக்களின் தேடல் அதிகரித்துள்ளது. இதனால் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மிளகாய்த்தூள் தூவினால் ஒரு சுவை; அப்படியே சாப்பிட்டால் இன்னொரு சுவை. இரண்டுமே அலாதியானவை. தர்பூசணி சாப்பிடுவதற்காகவே கோடைகாலம் வராதா என ஏங்குபவர்களும் உண்டு. குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி. இது தரும் எண்ணற்ற பலன்களில் இதயம் முதல் சிறுநீரகம் வரை காக்கும் நிவாரணி மேலும் தர்பூசணியில் 90 % அளவுக்கு நீர் உள்ளது. கோடை காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு பிரச்னைகள் ஏற்படாது.
வெயில் காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் நம்மைக் காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்தக் காலத்தில் இது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.என்கின்றனர் மருத்துவர்கள்.








