சென்னை: தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரமாக உள்ள இடங்களில் அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
சமூக, கலாசார, ஆன்மிக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.
குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்தல் வேண்டும்.
கொசுக்கள், பூச்சிகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல் அவசியம்.
குறிப்பிட்ட இடத்திலோ, பகுதியிலோ நோய்த் தொற்று பரவினால் உடனடியாக அதனைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நோய்கள் ஓரிடத்தில் தீவிரமாக பரவினால், அதுகுறித்து ஆய்வு செய்து பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தலாம். தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கவோ, நிறுத்தி வைக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.