கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவ வாய்ப்பு – உலக சுகாதாரம் எச்சரிக்கை..!

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல.
கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக சூழலியலாளர்கள், ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக நாடுகளை அடியோடு அசைத்துப் பார்த்த கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகம் ஒன்றில் இருந்து தான் பரவியது என்ற தகவலும், அதனை ஆய்வுகள் மூலம் சீனா மறுத்ததும் நாம் அறிந்த செய்தி. 70 லட்சம் உயிர் பலிகள், பொருளாதார இடர்பாடுகள், வேலை இழப்புகள் என மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய கோவிட் 19 பெருந்தொற்றைப் போல மீண்டும் ஒரு பெருந்தொற்று அதே சீனாவில் இருந்து பரவும் அபாயம் இருப்பதாக எழுந்திருக்கும் எச்சரிக்கைதான் நம்மை சற்று பீதிக்கு உள்ளாக்குகிறது.

சீனா – லாவோஸ் ரயில்வேக்காக சீனாவின் நிதி பங்களிப்பில் அந்நாட்டின் தெற்கு எல்லையில் இருந்து லாவோஸ் தலைநகர் வியன்டியேனை இணைக்கும் அதி விரைவு ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பாதையில் முக்கிய வழித்தடங்களில் சுமார் 422 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் வருகிறது. பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் கீழ் வரும் மிகப்பெரிய ரயில்பாதையை மலைகளை குடைந்து சுரங்கங்கள் அமைத்தும், காடுகளை அழித்தும் அமைப்பதன் மூலம் அங்குள்ள வவ்வால்கள் மனிதர்களை எளிதில் நெருங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
சீனா, லாவோசில் ஏற்கனவே வவ்வால் உணவுப் பொருளாகவும், அதன் ஒரு சில பகுதிகள் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வவ்வால் உடல் பகுதிகளை சேகரித்து வழங்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் கோவிட் 19க்கு முன்னதாக பாதிப்புகளை ஏற்படுத்திய சார்ஸ், நிபா, எபோலா உள்ளிட்ட வைரஸ்கள் வவ்வால் மூலமே பரவியதாகவும், தற்போது வனத்தை அழித்து ரயில் பாதை அமைப்பதன் மூலம் அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 25 கிலோ மீட்டர் வரை பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக கண்டறியப்படும் என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள்.
இதன் மூலமாக தெற்காசியா, சீனாவின் பெரும்பகுதி உள்ளிட்ட இடங்கள் எளிதில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் மீண்டும் ஒரு பெருந்தொற்று உருவாக வாய்ப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பாக லாவோஸ் மற்றும் சீனாவின் தூதரங்களில் கேள்வி எழுப்பியும் அதற்கான எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி, வர்த்தக மேம்பாடு என்ற அடிப்படையில் அமைக்கப்படும் அதி விரைவு ரயில் பாதையால் வவ்வால் இனங்கள் மூலமாக மீண்டும் ஒரு அச்சுறுத்தல் எழுவது உலக நாடுகளை சற்று கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலகநாடுகள் முன்னுரிமை தரவேண்டுமென உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இன்னுமொரு பெருந்தொற்றை தாங்கும் சக்தி நிச்சயம் இல்லை என்பது தான் உலக நாடுகளின் கூக்குரல்.. ஆனால் இதற்கு சீனா செவிமடுக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.