கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அனிதா (வயது 40)இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 46) கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 22 )இவர் கால்நடைகளை வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா தனது மாடுகளை விற்று தருமாறு கடந்து சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனிடம் கேட்டுள்ளார் . அதன் பேரில் கார்த்திகேயன் அனிதாவுக்கு சொந்தமான மாடுகளை ரூ.70 ஆயிரத்துக்கு விற்றுள்ளார் . ஆனால் அந்த பணத்தை அனிதாவிடம் கொடுக்கவில்லை. மேலும் அவர் அனிதாவிடம் ரூ.50 ஆயிரம் கடனும் வாங்கி இருந்தாராம். அந்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் கார்த்திகேயனை சந்தித்து தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு அனிதா கேட்டுள்ளார். அதற்கு அவர் விரைவில் பணம் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனாலும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து அனிதா சிறுமுகை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறுமுகை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும் ரஞ்சித் என்பவர் விசாரணை நடத்த கடந்த 3-ந் தேதி கார்த்திகேயன் வீட்டுக்கு சென்றார். அங்கு கார்த்திகேயன் இல்லை. அவரது தந்தை வேல்முருகன் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் போலீஸ்காரர் ரஞ்சித் உங்கள் மகன் கார்த்திகேயன் அனிதாவிடம் பணம் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்கவில்லை அது நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா ? கேட்டுள்ளார் .இது தொடர்பாக மாறி மாறி பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ரஞ்சித் விட்டுக்குள் இருந்த வேல்முருகனை சட்டையை பிடித்து இழுத்து தெருவுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவரை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து தாக்கியுள்ளார் .இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவிட்டார் .அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் வேல்முருகனை போலீஸ்காரர் ரஞ்சித் பூட்ஸ் காலால் மிதித்தது உண்மை என்பது தெரிய வந்தது .இதையடுத்து போலீஸ்காரர் ரஞ்சித் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார் .. இந்த நிலையில் கட்டிட மேஸ்திரியை பொது இடத்தில் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த போலீஸ்காரர் ரஞ்சித்தை பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்) செய்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். பொது இடங்களில் காவலர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் . அதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடுரோட்டில் கட்டிட மேஸ்திரியை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் சஸ்பெண்ட்..!
