பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில கூடுதல் முதன்மைச் செயலர் சித்தார்த் இந்த தகவலை வெளியிட்டார்.
உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இந்த நகரின் வரலாற்று மற்றும் ஆன்மிகப் பெருமையை பறைசாற்றும் வகையிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
ஆண்டுதோறும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதற்கு லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். ஃபல்கு ஆற்றங்கரையோரம் இந்த புனித நகரம் அமைந்துள்ளதோடு, மங்கள கௌரி, ஷிரிங்க ஸ்தான், ராம் ஷில்லா மற்றும் பிரம்மயோனி போன்ற மலைகள் இந்த நகரின் மூன்று பக்கங்களிலும் அரணாக அமைந்துள்ளது.
கயா நகரில் அமைந்திருக்கும் மிக முக்கிய கோயிலாக விஷ்ணுபத் கோயில் உள்ளது. இங்கு இறைவன் விஷ்ணுவின் பாதம் அமைந்திருப்பதாக ஐதீகம். உலகில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் முக்கிய இடமாக இருக்கும் புத்தகயாவும் கயா நகரில்தான் அமைந்துள்ளது. கௌதம புத்தர், இந்த புத்த கயாவில்தான் ஞானம் பெற்றார் என்பது நம்பிக்கை.
இந்த முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.