தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
அதாவது திருச்சி நிர்வாகத் தலைநகராக இருக்கும் என்றும், சென்னை தொழில்நுட்ப தலைநகர் என்றும், கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகர் எனவும், மதுரை மொழி கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரமாக இருக்கும் எனவும், கன்னியாகுமரி தமிழ் மெய்யியல் தலைநகராக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.
மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி நடைமுறை கொண்டு வரப்படும். மாநில எல்லைக்குள் பயணிக்கும் ரயில்வே வழித்தடங்களை ரயில்களை மாநில அரசே நிர்வகிக்கும் முறையை நாம் தமிழர் அரசு இந்திய அரசியலைப்புச் சட்டமாற்றம் மூலம் கையகப்படுத்தும். ஒன்றிய அரசிற்கு படைத்துறை, நாணயம், உள்ளூர் ரயில்வே நீங்கலாக மாநிலங்களுக்கிடையேலான பயணிக்கிற தொடர்வண்டி, மாநில அரசின் ஒப்புதலோடு கூடிய வெளியுறவுத்துறை போன்ற துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் சட்டமியற்றி, நடைமுறைப்படுத்துகிற உரிமை மாநில அரசிற்கே உண்டு என்கிற நிலையை உரிய சட்ட மாற்றங்கள் மூலம் ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்.
உயர்நீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களிலும் தாய்மொழித் தமிழை ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை நாம் தமிழர் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு குடிமகனும் வாக்குச் செலுத்த வேண்டும் என்பது உரிமையல்ல. அது கட்டாயக் கடமை. வாக்குரிமை பெற்ற எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு முறை நீக்கப்பட்டு வாக்குச்சீட்டு முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
விவசாயம் அரசுப் பணியாக மாற்றப்படும். விவசாயிகளுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தனியார் தரத்திற்கு உயர்த்தி, அனைவருக்கும் இலவசத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும்.







