ராமதாஸ் – அன்புமணி இடையேயான நீண்டகால உட்கட்சி மோதல் விரைவில் முடிவுக்கு வரும்..!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையேயான நீண்டகால உட்கட்சி மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கட்சியின் போக்கு தெளிவாக இல்லாத நிலையில், சமீபத்தில் அதிமுக தலையிட்ட பிறகு சில அரசியல் மாற்றங்கள் இருவரையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளன. இதனால், பாமகவில் நிலவி வந்த குழப்பங்கள் கிளைமேக்ஸை எட்டியுள்ளது.

பாமகவை உருவாக்கி, அதை வலுப்படுத்திய ராமதாஸ், தன்னுடைய வாரிசாக அன்புமணியை இளைஞர் அணி தலைவராக நியமித்து, பின்னர் கட்சித் தலைவராகவும் முன்னிறுத்தினார். ஆரம்பத்தில் இருவருக்கும் நல்ல ஒத்துழைப்புடன் கட்சி முன்னேறியது.

ஆனால், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. வன்னியர் சங்க மாநாட்டை முன்னிட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தந்தை-மகன் உறவை குலைத்தது. ராமதாஸ் தன்னைத் தலைவராக அறிவித்து, அன்புமணியை நீக்குவதாகச் சொன்னார்.

இதற்கு எதிராக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணியின் பக்கம் சென்றனர். இதனால் கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்தது. இதற்கிடையில் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விவசாயம், போதைப்பொருள், சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல பிரச்சனைகளை மையமாகக் கொண்டு திமுக எதிர்ப்பை வலியுறுத்தி வருவதால், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதேநேரத்தில், அன்புமணியுடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் சுமார் 35 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டு வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரு தரப்பும் கூட்டணிக்கான அடித்தளத்தை அமைத்து வருவதாகத் தெரிகிறது. மறுபுறம், பாமக உள்மோதலை முடிவுக்கு கொண்டு வர அதிமுகவும், சில திமுக தலைவர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம், ராமதாஸை நேரில் சந்தித்து முக்கியமான அரசியல் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

அவரிடம் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால், பாமக மீண்டும் ஒருங்கிணைந்து, அதிமுக கூட்டணியில் முக்கிய பங்காக செயல்பட வாய்ப்புள்ளது. கடந்த 2021 தேர்தலிலும் பாமக-அதிமுக கூட்டணிக்கான முக்கிய பாலமாக இருந்த சண்முகம், 2026 தேர்தலுக்காகவும் அதேபோன்ற முக்கிய பங்கு வகிக்கப் போவதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. இதனால், பாமக குடும்ப மோதல் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் தான் ராமதாஸ், அன்புமணி குறித்து பேசி வந்தாலும் அவர் தரப்பில் இருக்கும் ஜிகே மணி உள்ளிட்டோர் அன்புமணி குறித்து எதுவுமே பேசாமல் இருக்கின்றனர். ஏற்கனவே ஜிகே மணி உள்ளிட்டோர் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேச முயற்சித்த நிலையில் அது முடியாமல் போனது. ஆனால், ராமதாஸ் பக்கம் இருக்கும் சில நிர்வாகிகள் தான் பிரச்சனைக்கு காரணம் என்பதால் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே வரும் வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ராமதாஸ் சந்திப்பு நடக்கும் எனவும், இம்மாத இறுதிக்குள் பாமகவில் நடந்து வந்த குழப்பங்கள் முற்றிலும் முடிவுக்கு வரும் என்கின்றனர் நம்மிடம் பேசிய பாமகவினர்.