உலகளாவிய பொருளாதார நிலையற்றத்தன்மையும் பணவீக்க அச்சங்களும் அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான தேவை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இதனால், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை பெரிதும் உயர்த்தி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் தங்க சேமிப்பில் முன்னணியில் உள்ளன.
அக்டோபர் 8, 2025 நிலவரப்படி, சீனாவின் தங்க இருப்பு 2,298.5 டன்களாக உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் தங்க இருப்பு 880 டன்களாக பதிவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த இரு நாடுகளும் தங்கத்தை சீராக வாங்கி குவித்து வருகின்றன.
தங்கம் உலகளவில் “பாதுகாப்பான முதலீடு” எனக் கருதப்படுவதால், அதன் விலை கடந்த சில ஆண்டுகளில் ஏற்றம் கண்டுள்ளது. முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.70,000-க்கு குறைவாக இருந்த நிலையில், தற்போது ₹1.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீன மக்கள் வங்கி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 39.2 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. மாதந்தோறும் 2 முதல் 5 டன் வரை தங்கம் வாங்கும் சீனா, அமெரிக்க டாலரின் மீது அதிகம் சார்ந்திருப்பதை குறைக்க முயல்கிறது. நாணய கையிருப்பை பன்முகப்படுத்தும் நோக்கில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
2025 செப்டம்பரில் மட்டும் 0.4 டன் தங்கத்தை வாங்கிய சீனா, தங்கத்தின் உலகளாவிய மதிப்பு சுமார் ஒரு அவுன்ஸுக்கு $3,900 என்ற அளவை எட்டிய நிலையில் கூட, தங்கத்தின் மீதான முதலீட்டில் தீவிரமாக செயல்படுகிறது. இது சீனாவின் நாணய நிலையை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மூலோபாயமாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவில் பொதுமக்களும் தங்கத்தை மீண்டும் ஒரு முதலீட்டு வாய்ப்பாகக் கருதி வருகின்றனர். ஷாங்காய், பெய்ஜிங் போன்ற நகரங்களில் தங்க நகைகள் மீதான தேவை அதிகரித்துள்ளன. விலை உயர்ந்தாலும், பழைய நகைகளை மாற்றி புதியதாக வாங்கும் நடைமுறை வேகமாகப் பரவி வருகிறது.
மேலும், தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களுக்கான விதிமுறைகளை தளர்த்தும் முயற்சியிலும் சீன மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது. புதிய வரைவு திட்டத்தின் கீழ், “multi-use permits” எனப்படும் பலமுறை பயன்படுத்தக்கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. இதன் கால அளவும் ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட உள்ளது. இதனால் சீனாவுக்கு தங்கத்தை எளிதாக இறக்குமதி செய்து, நகைகளாக மாற்றி விற்பனை செய்வதும் சுலபமாகும்.
இந்தியாவும் தங்க சேமிப்பில் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது 880 டன் தங்கத்தை வைத்துள்ளது. இதில் சுமார் 512 டன்கள் நாக்பூர் மற்றும் மும்பையில் உள்ள சேமிப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பாங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ளன.
இது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நாணய கையிருப்பில் 11.7 சதவீதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் தங்க இருப்பு 58 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015-இல் 557 டன்களாக இருந்தது, இப்போது 880 டன்களாக உயர்ந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார அதிர்வுகள், பணவீக்க அச்சங்கள், டாலரின் ஆட்சியிலிருந்து விலகும் நாடுகளின் முயற்சிகள் – இவையெல்லாம் இணைந்து தங்கத்தின் மதிப்பையும் அதன் தேவைமையும் பலமடங்கு உயர்த்தியுள்ளன.
சீனாவும் இந்தியாவும் தங்கள் நாணய சுயாதீனத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் வலுப்படுத்தும் முயற்சியாக தங்க குவிப்பில் உறுதியாக முன்னேறி வருகின்றன.





