2-வது மனைவிக்கு ஓய்வூதியம் பெற உரிமை இல்லை

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரி எம். ராதா கிருஷ்ணன் கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அவரது முதல் மனைவி வசந்தா உயிருடன் இருக்கும் போதே ராதாகிருஷ்ணன் கடந்த 1992-ல் ரேவதி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு இரு மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, கடந்த 2009-ஆம் ஆண்டு தனது இரு மனைவிகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் ஓய்வூதிய விண்ணப்பத்தில் நாமினியாக இருவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கு நடந்து கொண்டிருந்த போது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மனைவி வசந்தா உயிரிழந்துள்ளார். அதன்பிறகு ரேவதி ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி ஓய்வூதியம் இரண்டாவது மனைவிக்கு கிடைக்கும் வகையில் பெயரை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி முதல் மனைவி இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்து கொள்வது தவறான நடவடிக்கை என்று கூறினர்.மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டது செல்லாது என்றும் முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது என்றும் கூறினார்கள்.