சென்னை: “ஆயிரம் இருந்தாலும் விஜய் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என 2 வாரங்களுக்கு முன்பு பேசிய சீமான், தற்போது, “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
விஜய் vs சீமான் கருத்து யுத்தம் வெடித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும்… அவர் கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி பேசியிருந்தார். அடுத்த 2 வாரங்களில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான்.
நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், “இது கொள்கை அல்ல… கூமுட்டை! சாலையில் ஒன்று அந்த பக்கம் நில்லு, இல்ல இந்த பக்கம் நில்லு, நடுவில் நின்றால் லாரியில் அடிப்பட்டு செத்து விடுவாய். நடுநிலையா? தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றா ப்ரோ? What Bro? Its Very Wrong Bro! குட்டிக்கதை சொல்பவன் அல்ல தம்பி.. வரலாற்றை கற்பிக்க வந்தவன். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரிதான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சீமானின் இரண்டு பேச்சுகளுக்கும் நடுவே ஒரே ஒரு கோடுதான். அது அக்டோபர் 27. அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து.” எனப் பேசினார்.
மேலும், “அரசியல்ன்னா கோபமா கொந்தளிப்பவர்தான் ஏதோ புரட்சி செய்ய வந்தவங்க என்ற கான்செப்ட் முன்பெல்லாம் இருந்தது. அதெல்லாம் நமக்கு எதுக்குங்க, அது நமக்கு செட்டும் ஆகாதுங்க! அதனால இந்த ஆ.. ஊ.. ஆச்சா போச்சானு கத்துறத விட்டுட்டு கோபமா கொந்தளிக்கிறத விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட வேண்டும்” எனக் கூறினார் விஜய். சீமானை குறி வைத்தே விஜய் இவ்வாறு பேசியதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று சென்னை பெரம்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், தமிழ்நாடு நாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து சீமான் அவருக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால், தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றினார். இந்த நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் விஜய் குறித்து கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் சீமான்.
இந்தக் கூட்டத்தில் விஜய் குறித்து சீமான் பேசுகையில், “தமிழ் தேசியமும், திராவிடமும் ஒண்ணு… எங்க கண்ணு.. என்று புதிய தத்துவம் கூறியதும் பயந்துவிட்டேன். இப்போது காட்டுக்கோழியும், நாட்டுக்கோழியும் ஒண்ணு என்று கூறுகிறார். இப்படி ஏன் உணர்கிறார் என்றால் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் ஒருவரே நடித்ததால் இப்படி நினைத்துவிட்டார்.
திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. தமிழர்களுக்கு திராவிடம் அயல்மை. தமிழ் தேசியமே பொருந்தும்…பேருண்மை. இரண்டும் ஒன்று எனக் கூறும் அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல. கூமுட்டை. ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல.. கொடுநிலை.
நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை சொல்ல வந்தவன். நான் கருவிலேயே யார் என் எதிரி என்று தீர்மானித்து பிறந்தவன். நான் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து சிந்தித்து வந்தவன் அல்ல…கொடும் சிறையில் இருந்து சிந்திந்து வந்தவன். சத்தமாகப் பேசுகிறேனா…ஆமாம், சரக்கு இருக்கிறது, கருத்து இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசுகிறேன்.
நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.” என கடுமையாக அட்டாக் செய்துள்ளார் சீமான்.