கோவை பெரிய கடை வீதியில் “சிம்கோ ” என்ற துணிக்கடை . இது அடுக்குமாடி கட்டிடம் ஆகும். இதன் ஒரு பகுதியில் செருப்பு கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11:30 மணியளவில் கட்டிடத்தின் 3-வது மாடியில் மின் கசிவால் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிகளில் பற்றிய தீ மளமளவென பரவியது .இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அத்துடன் கரும்புகையும் பரவியது. இதனால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுமார் 100 பேர் அலறி அடித்துக் கொண்டு கட்டிடத்திலிருந்து வெளியேறினார்கள். இதனால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் கரும்புகை மூட்டம் காரணமாக கடை ஊழியர்கள் புவனேஸ்வரி, அனிஷா ஆகியோர் மயங்கி விழுந்தனர். அவர்களை சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் கடையில் இருந்த துணிகள், செருப்புகள் ,தரை விரிப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமடைந்தது. கட்டிடமும் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கோவை தெற்கு, வடக்கு, கணபதி, , கோவை புதூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 8வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் தண்ணீரை பீச்சி யடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயரமான கட்டிடத்தில் தீயை அணைக்கும் “ஸ்னார்கல் ” என்ற நவீன வாகனமும் வரவழைக்கப்பட்டது. அதில் ஏறி நின்று தண்ணீரை பீச்சி அடித்து வீரர்கள் தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அருகில் உள்ள கட்டிடத்துக்கும் தீ பரவ தொடங்கியது இதை தடுக்க தீயணைப்பு வீரர்கள்கடுமையாக போராடினார்கள். இருந்தாலும் அருகில் இருந்த வணிக வளாக கட்டிடமும் தீ விபத்தில் சேதமடைந்தது .இதை யடுத்து தகவல் அறிந்த மாவட்டகலெக்டர் பவன் குமார் ,மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை விரைவு படுத்தினார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் பெரிய கடை வீதி பகுதியில் வாகன போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மாலை 3:30 மணியளவில் தீ முற்றிலும் அணைக்ப்பட்டது. தீவிபத்துக்கு காரணமானஅந்த கட்டிடத்தை சுற்றி இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.இந்தத் தீவகத்தில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்துகடை மேனேஜர் ரஹீம் உக்கடம் போலீசில்புகார் செய்துள்ளார்.இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை பெரிய கடை வீதியில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..!
