மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு.
பாகிஸ்தானில் உள்ளவர்களுடன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையோர மாநிலங்களில் இருப்பவர்கள் நடத்திய வாட்ஸ்ஆப் சாட், மின்னஞ்சல் தகவல்கள் என அனைத்தும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டுக்குள் ஊடுருவி இருக்கும் அல்லது நாட்டுக்குள் இருந்து பாகிஸ்தானுக்கு உதவும், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா தரப்பில் இருக்கும் பயங்கரவாத ஆதரவு மற்றும் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து, அவர்கள் எந்தெந்த அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதையும் அறியும் வகையில், அனைத்து உரையாடல்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாதிகளுடன் அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் மே 7ஆம் தேதிக்குப் பிறகு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருவேளை, அவசியம் ஏற்படின் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்படுவார்கள். அவர்களது உரையாடல்களின் பின்னணியில் இருக்கும் சதிச் செயல்கள் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லையோர மாநிலங்களில் வாழ்வோர், சில முக்கிய தகவல்களை கசிய விடுவதாகக் கிடைத்திருக்கும் தகவலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், ராணுவத்தினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், பயங்கரவாத அமைப்புகளின் ஸ்லீப்பர் செல்கள் களையெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.