சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: எண்ட்ரி கொடுத்த ஓபிஎஸ்… கலந்து கொள்ளாத இபிஎஸ்..!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசியல் அமைப்புக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை வீடுகளில் ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் மாணவர்கள் ஏராளமானோர் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் தேசிய கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர். சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், பழனிவேல் தியாகராஜன், மெய்நாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். திமுக தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தன் மற்றும் த.மா.க கட்சித் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். மேலும், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார்.

தமிழக சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவரும் அதிமுக இடைக் கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. சமீப காலமாக ஓபிஎஸ் கலந்து கொள்ளும் நிகழ்வில் எடப்பாடியும், எடப்பாடி கலந்து கொள்ளும் நிகழ்வில் ஓபிஎஸ் தரப்பும் கலந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.