தாரிக் ரஹ்மான் வெற்றி

வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

18 மாதங்களுக்குப் பிறகு புதிய அரசை தேர்வு செய்ய நேற்று அங்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவியது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

350 தொகுதிகள் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளரின் மறைவால் தேர்தல் ரத்தானதையடுத்து, மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேச்சைகள் களம் கண்டனர்.

நாடு முழுவதும் உள்ள 42 ஆயிரத்து 779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வந்தது.

தாரிக் ரஹ்மான் தனது சொந்த தொகுதியான புகுராவில்(Bugura) 2 லட்சத்து 16 ஆயிரத்து 284 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி வேட்பாளர் அபிதுர் ரஹ்மான் 97 ஆயிரத்து 626 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். தனிப்பெரும்பான்மையை பெற 151 இடங்களில் வெற்றி பெற்ற வேண்டிய நிலையில், வங்கதேச தேசியவாதக் கட்சி 170 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது. இதனால், வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத இடைக்கால அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்க உள்ளார். ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் கடந்த டிசம்பர் மாதம் நாடு திரும்பிய நிலையில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலுடன், 84 அம்ச ஜனநாயக சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம்’ மீதான மக்கள் வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில், ஜூலை தேசிய சாசனத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவாக 72 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் வங்கதேச தேசியவாதக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும், நேர்மறையான அரசியலை முன்னெடுப்போம் என்றும் ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சித் தலைவர் ஷபிகுர் ரகுமான் உறுதியளித்துள்ளார். இந்த தேர்தலை கேலிக்கூத்து என்று விமர்சித்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தின் கீழ் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.