ஜப்பானிய தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

யலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, அம்மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பழம்பெரும் ஒசாகா கோட்டையை பார்வையிடுமாறு அவர் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்றுக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகா கோட்டைக்கு சென்று பார்வையிட்டார்.