த.வெ.க கட்சியின் உறுப்பினர் சேர்க்கை… இரண்டே நாட்களில் 50 லட்சத்தைக் கடந்து மாஸ் காட்டும் விஜய்.!!

யார் எந்த கூட்டணிக்கு வேண்டுமானாலும் போங்க… என் வழி தனி வழியாகவே இருக்கட்டும் என்று புலி பாய்ச்சல் காட்டி வருகிறார் நடிகர் விஜய்.

கூட்டணி சேராமல் தனித்து இயங்கி வருவதால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு தனி மரியாதை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. திமுகவுடன் கமல் வைத்த கூட்டணியில் அவரது அரசியல் எதிர்காலம்  கேள்விக்குறியாகி இருப்பதாக வாக்காளர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை துவங்கிய ரெண்டே நாட்களில் 50 லட்சத்தைக் கடந்து கில்லியாக வலம் வருகிறார் விஜய்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை யாருக்கும் ஆதரவும் இல்லை சட்டமன்ற தேர்தலே இலக்கு என்று அறிவித்த விஜய், தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணியை சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலியை நடிகர் விஜய் நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்ததுடன், முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். இதையொட்டி அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடன் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்புவோர், எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். பிடித்திருந்தால், விருப்பப்பட்டால் நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணையுங்கள். சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைப்போம்” என்று பேசியிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் இணையவதற்கான லிங்குகளை தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் கொடுத்திருந்தனர். இதனையடுத்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மளமளவென குவிந்தது. உறுப்பினர் சேர்க்கை செயலி தொடங்கப்பட்டதில் இருந்து 50 லட்சம் பேருக்கும் அதிகமானவர்கள் இதுவரை கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.