ஏஐ துறையில் உலகின் சிறந்த 100 இளம் திறமையாளர்களை ஈர்க்க சூப்பர் திட்டம்… கலக்கும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்..!

ண்டன்: பிரிட்டன் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த தவறான முடிவுகளால் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அழுத்தம் அதிகரிக்க லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பதவிக்கு வரும் முதல் இந்து என பல்வேறு சிறப்புகளை அழர் பெற்றுள்ளார்.

பொதுவாக மற்ற பிரதமர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள சில காலம் இருக்கும். முதல் 100 நாட்கள் எந்தவொரு விமர்சனமும் பெரிதாக இருக்காது. ஆனால், புதிதாகப் பிரதமர் பதவிக்கு வந்துள்ள ரிஷி சுனக்கிற்கு இந்த காலம் எல்லாம் இல்லை. பிரிட்டன் பொருளாதாரம் இப்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொருளாதாரத்தை உடனடியாக மீட்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இது புதிய பிரதமர் ரிஷி சுனக் மீதான அழுத்தத்தை அதிகரித்து உள்ளது.

பொருளாதாரம் இப்போது மந்தமான நிலையில் உள்ள நிலையில், அவர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளார். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் திறமையான டாப் 100 வல்லுநர்கள் ஈர்க்க அவர் இந்தத் திட்டத்தை வெளியிட்டு உள்ளார். பர்மிங்காமில் நடந்த பிரிட்டிஷ் தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய ரிஷி சுனக், இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பிரிட்டன் செல்வோர் விசா பெறுவதில் சிக்கல் நிலவும் நிலையில் அதைச் சரி செய்யும் புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழில்முனைவோர், திறமைசாலிகளைக் கவரும் வகையில் இந்த விசா முறை இருக்கும் என்று தெரிவித்தார்.

பிரிட்டன் இப்போது பிரெக்ஸிட் அமைப்பில் இல்லாத நிலையில், இதன் மூலம் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களுடன் எளிதாக வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் ரிஷி சுனக் தெரிவித்தார். பிரிட்டன் ஏற்கனவே இந்தியா உடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதை மிக விரைவாக அமலுக்குக் கொண்டு வரவும் தீவிர முயற்சிகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், இதை எல்லாம் விட ஏஐ துறையில் தான் அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

வல்லுநர்களைக் கொண்ட பிரிட்டிஷ் தொழில் கூட்டமைப்பில் இது குறித்து ரிஷி சுனக் மேலும் கூறுகையில், “உலகின் சிறந்த ஏஐ வல்லுநர்களை அமெரிக்காவும் சீனாவும் இழுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால்தான், சான்சலராக இருந்த போதே ஏஐ சார்ந்த படிப்புகளுக்கு உதவித்தொகை அறிவித்தேன். இப்போது அடுத்தகட்டமாக ஏஐ துறையில் உலகின் சிறந்த 100 இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து ஈர்க்கும் திட்டத்தை நாம் தொடங்குகிறோம்.

நாம் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை. எனவே, சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கலாம். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நமக்கு நாமே நேர்மையாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை நாம் வாங்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அனைவரும் இங்கு வருவதைத் தடுத்து, முறையான குடியேற்றத்தை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களைப் பிரிட்டன் அழைத்து வரப் போகிறோம்.

இந்தத் திட்டம் நிச்சயம் பிரிட்டன் மக்களின் நம்பிக்கையைப் பெற உதவும். மேலும், இது சட்டவிரோத குடியேற்றத்தைச் சமாளிப்பதிலும் பெரிய பங்கு வகிக்கும். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள் தான் பிரிட்டன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்து உள்ளது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள் குறைந்துள்ளது. இதுவே நமக்கும் அமெரிக்காவுக்கும் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கக் காரணமாகும்.

பிரிட்டஷ் குழந்தைகளைச் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாக மாற கற்றுத் தருவதன் மூலம் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், பிரிட்டன் கற்றல், கண்டுபிடிப்பு மற்றும் கற்பனை உள்ளிட்டவற்றுக்கான இடமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படித்தான் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். உங்கள் பிரதமராக நான் இதைத்தான் செய்யப் போகிறேன்” என்றார்.

பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் கொள்கை ரீதியாகவும் அவர் முதல் உரை இதுவாகும். உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. உழைக்கும் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ரிஷி சுனக் வரும் காலங்களில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.